×

கிரெம்ளின் மாளிகை மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சி: உக்ரைன் சதி என குற்றச்சாட்டு

கீவ்: மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வசிக்கும் கிரெம்ளின் மாளிகையை தாக்க ஏவப்பபட்ட 2 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதிபர் புடினை கொல்ல உக்ரைன் செய்த இந்த முயற்சியில் அவர் உயிர் தப்பியதாக ரஷ்யா கூறியுள்ளது. ஆனால், ரஷ்யாவின் குற்றச்சாட்டை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது. ஒன்றரை ஆண்டுகளாக நடக்கும் இப்போரில் உக்ரைனின் பல நகரங்கள் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன. சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அதே சமயம், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகள் செய்து வருகின்றன.

இதனால், ரஷ்யா எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் உக்ரைன் கடந்த சில நாட்களாக, ரஷ்யா ஏற்கனவே கைப்பற்றிய கிரீமியா உள்ளிட்ட பகுதிகளை மீண்டும் வசப்படுத்த எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் கிரீமியாவின் எண்ணெய் கிடங்கை உக்ரைனின் 2 டிரோன்கள் தாக்கியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதே சமயம், உக்ரைன் தலைநகர் கீவ்வை குறி வைத்து ரஷ்யா ஏவி பல ஏவுகணைகளை உக்ரைன் வானிலேயே தடுத்து அழித்தது. இந்த போருக்கு நடுவே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல பல சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக அந்நாட்டு ராணுவம் அடிக்கடி குற்றச்சாட்டு சுமத்தி வருகிறது.

இந்நிலையில், புதன் கிழமை அதிகாலை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள அதிபர் மாளிகையான கிரெம்ளின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய ராணுவம் நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியது. ரஷ்ய அதிபர் புடினை கொல்லும் சதித்திட்டத்துடன் இந்த டிரோன் அனுப்பப்பட்டதாகவும், அதனை வானிலேயே தாக்கி அழித்ததாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர். இதுதொடர்பாக சில வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. அதில் அதிபர் மாளிகையின் கோபுரத்தின் அருகே டிரோன் ஒன்று தாக்கி அழிக்கப்பட்ட போது பெரும் தீப்பிழம்பு ஏற்படுவது காட்டப்படுகிறது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணி அளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தாக்குதல் முயற்சி நடந்த போது அதிபர் புடின் கிரெம்ளின் மாளிகையில் இல்லை எனவும், அவர் தனது நோவோ-ஓகாரியோவோ இல்லத்தில் இருந்ததாகவும் இதனால் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என அவரது செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறி உள்ளார். இந்த சம்பவத்தால் புடினின் வழக்கமான அலுவல் பணிகள் எதுவும் மாற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜி படைகளை தோற்கடித்த ரஷ்யாவின் வெற்றி தின அணிவகுப்பு வரும் 9ம் தேதி சிவப்பு சதுக்கத்தில் நடைபெற உள்ளது.

அதை சீர்குலைக்கும் வகையில் நடத்தப்பட்ட தீவிரவாத செயல் என ரஷ்ய ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது. அதே சமயம் இந்த குற்றச்சாட்டுகளை உக்ரைன் அடியோடு மறுத்துள்ளது. உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் அளித்த பேட்டியில், ‘‘கிரெம்ளின் மீதான டிரோன் தாக்குதல்களுக்கும் உக்ரைனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இனிவரும் நாட்களில் உக்ரைன் நகரங்கள், பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்த முயற்சிப்பதை நியாயப்படுத்தும் வகையில் இந்த பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது’’ என்றார்.

The post கிரெம்ளின் மாளிகை மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சி: உக்ரைன் சதி என குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Kremlin ,Putin ,Ukraine ,Kiev ,President ,Vladimir Putin ,Moscow ,Chancellor ,Dinakaran ,
× RELATED 5வது முறையாக ரஷ்ய அதிபராக புடின்...